நமது நாட்டைப் பாதிக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புடைய வங்கதேச ஹியூஜி தீவிரவாதிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று டாக்காவில் நாளை துவங்கவுள்ள இருநாட்டு உள்துறைச் செயலர்கள் மட்டத்திலான பேச்சில் வங்கதேசத்திடம் இந்தியா வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை துவங்கி இரண்டு நாட்கள் நடக்கவுள்ள இந்தப் பேச்சில் இந்தியா, ஹைதராபாத் தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதல்களில் ஹியூஜி தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்களை வங்கதேசத்திடம் வழங்குவதுடன், அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், "உல்ஃபா இயக்கத் தலைவர்களான வங்கதேசத்தைச் சேர்ந்த பரேஷ் பருவா, அனுப் சேட்டியா, அரபிந்தா ராஜ்கவா ஆகியோரின் மீதும் நடவடிக்கை எடுத்த வலியுறுத்தப்படும்" என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருநாட்டு எல்லையில் இருந்து இந்தியாவிற்கு எதிரான சதித்திட்டங்களைத் தீட்டுவதற்கு வங்கதேசத் தீவிரவாதிகள் பயன்படுத்தி வருவதாக இந்தியா கண்டறிந்துள்ள 110 புதிய மறைவிடங்கள் பற்றிய விவரங்களையும், வங்கதேசப் படையிருடன் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் வேட்டை குறித்தும் உள்துறைச் செயலர்கள் பேச்சில் விவாதிக்கப்படும்.
ஆயுதங்கள், வெடி பொருட்கள், போதைப் பொருட்கள், போலியான இந்திய ரூபாய்கள் ஆகியவை வங்கதேசத் தீவிரவாதிகளால் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது பற்றியும், எல்லைப் பாதுகாப்பு பற்றியும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
இந்தியா சார்பில் மத்திய உள்துறைச் செயலர் மதுக்கர் குப்தா தலைமையிலான குழுவினரும், வங்கதேசம் சார்பில் உள்துறைச் செயலர் முகமது அப்துல் கரீம் தலைமையிலான குழுவினரும் இந்தப் பேச்சில் பங்கேற்கின்றனர்.