பீகார் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை 'தேசியப் பேரழிவு' என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ.1,000 கோடியை உடனடியாக ஒதுக்கியதுடன், நிலைமையைச் சமாளிக்க 1.25 லட்சம் டன் தானியங்களை மத்திய அரசு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
பீகாரில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் பலத்த மழையினால், அறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பல்வேறு முக்கிய ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டியுள்ளது.
மழை- வெள்ளத்திற்கு இதுவரை 55 பேர் பலியாகியுள்ளதுடன், 15 மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. சுமார் 25 லட்சம் பேர் வீடுகளை இழந்து பள்ளிகளிலும், அரசு கட்டடங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.
நிலைமை மிகவும் மோசமடைந்ததால் நேற்று தலைநகர் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசின் உதவியாக ரூ.1,000 கோடி வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக 1 லட்சம் டன் தானியங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், இன்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தலைநகர் டெல்லியில் இருந்து இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலமாக பீகார் மாநிலம் புர்னியா விமான நிலையத்திற்கு வந்தனர். அங்கு அவர்களை வரவேற்ற நிதிஷ் குமார், வெள்ள நிலவரம் குறித்து விளக்கினார்.
பின்னர், கோசி ஆற்று வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சுபால், சஹார்சா, அராரியா, மாதேபுரா ஆகிய 4 மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை இந்திய விமானப் படையின் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தனர்.
பிரதமர், சோனியாவுடன் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் பாட்டீல், லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரும் நிலைமையை ஆய்வு செய்தனர்.