பாகிஸ்தான் படையினரின் ஆதரவுடன் ஜம்முவிற்குள் நுழைந்ததுடன், 5 பேரைக் கொன்றுவிட்டு ஒரு வீட்டிற்குள் பதுங்கியுள்ள தீவிரவாதிகளிடம் இருந்து, பிணையக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள 4 குழந்தைகள் உட்பட 7 பேரை மீட்க படையினர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கோண்டுள்ளனர்.
பன்னாட்டு எல்லையில் இருந்து 20 கிலா மீட்டர் தொலைவில், ஜம்முவின் புறநகர் பகுதியான சின்னூர் என்ற இடத்தில் குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதியில், பிணையக் கைதிகளுடன் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள வீட்டில் இன்று காலை முதல் நடந்து வரும் மோதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளான்.
கையேறி குண்டுகள், ஏ.கே.47 துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர வெடிபொருட்களுடன் உள்ள தீவிரவாதிகளிடம் இருந்து பிணையக் கைதிகளை உயிருடன் மீட்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் காலை முதல் போராடி வருவதாகப் படையினர் தெரிவித்துள்ளனர்.
பூஞ்ச் எல்லையில் நேற்றுப் பாகிஸ்தான் படையினர் நடத்திய அத்துமீறிய தாக்குதலைச் சாதகமாக்கிக் கொண்டு ஊடுருவிய தீவிரவாதிகள், இன்று காலை சரக்கு வாகனம் ஒன்றில் ஏறி வந்து ஜம்மு- அக்னூர்- பூஞ்ச் நெடுஞ்சாலையில் தோமனா- மிஸ்ரிவாலா பகுதியில் உள்ள ராணுவச் சோதனை சாவடியை தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில், பணியில் இருந்த இளநிலை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். காக்கி உடையணிந்திருந்த தீவிரவாதிகள் பின்னர் ஆட்டோ ஒன்றைக் கடத்தி, சின்னூர் பகுதிக்கு வந்துள்ளனர்.
அங்கு 4 பேரைச் சராமாரியாகச் சுட்டுக்கொன்றுவிட்டு, பில்லு ராம் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்தவர்களை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
தற்போது தீவிரவாதிகளின் பிடியில் உள்ள 7 பிணையக் கைதிகளில் பில்லு ராமின் மனைவியும், மூன்று முதல் 9 வயதிற்கு உட்பட்ட அவரது 4 குழந்தைகளும் அடங்குவர். ஏற்கெனவே பெண் ஒருவர் மீட்கப்பட்டுவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட பகுதி முழுவதும் படையினர் குவிக்கப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகப் படைத்துறைப் பேச்சாளர் லெப்டினன்ட் கலோனல் எஸ்.டி. கோஸ்வாமி தெரிவித்தார்.