பந்த் நடத்துவதை அனுமதிக்க முடியாது என்று மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியுள்ளதற்கு, அவர் சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பந்த் நடத்துவது ஜனநாயக உரிமை என்றும், புத்ததேவ் போன்ற மூத்த பொதுவுடமை அரசியல்வாதியிடம் இருந்து இதுபோன்ற கருத்தைத் தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை யாராலும் பறிக்க முடியாது என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.
கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அச்சுதானந்தன், "புத்ததேவ் இந்தக் கருத்தைக் கூறியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. அப்படியிருந்தால் அது தவறானது" என்றார்.
"புத்ததேவின் கருத்து அவரது தனிப்பட்ட நம்பிக்கை. அதற்கு எதிராக நான் கருத்துக்கூற ஒன்றுமில்லை" என்று மேற்குவங்க சி.ஐ.டி.யு. பொதுச் செயலர் கலி கோஸ் கூறினார்.
"பொதுவுடமைத் தலைவரிடம் இருந்து இந்தக் கருத்து விரும்பத்தகாதது" என்று இடது முன்னணியில் அங்கம் வகிக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட், புரட்சிகர சோசலிசக் கட்சி, பார்வார்ட் பிளாக் ஆகிய கட்சிகள் விமர்சித்துள்ளன.
ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலர் குருதாஸ் தாஸ் குப்தாவிடம் கேட்டதற்கு, "இது துரதிஷ்டவசமானது. பொதுவுடமை இயக்கத்தின் தலைவராக உள்ளவர் இப்படிப் பேசக்கூடாது" என்றார்.
"வேலை நிறுத்தம் என்பது தொழிலாளிகளின் கடைசி ஆயுதம். இதை யாராலும் தடுக்க முடியாது. தொழில்மயமான நாடுகளில்கூட இது நிச்சயம் இருக்கும்." என்றும் அவர் தெரிவித்தார்.
"பந்த் நடத்துவது ஜனநாயக உரிமை. அதை எப்படிப் பறிக்க முடியும்?" என்று இந்தியக் கம்யூனிஸ்ட் தேசியச் செயலர் டி.ராஜா கருத்துத் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று தொழிலதிபர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, தான் பந்த்-ஐ எதிர்ப்பதாகவும், இதுபோன்ற போராட்டங்கள் மாநிலத்தில் எங்கு நடந்தாலும் அது சட்டவிரோதமானது என்றும் கூறியிருந்தார்.