குஜராத் மாநிலம் சூரத் நகரில் 25 க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
"சூரத் நகரத்தில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகளை வைப்பதற்கு உதவிய முக்கியக் குற்றவாளிகளான தன்வீர் பதான், ஜாகீர் பட்டேல் ஆகிய உள்ளூர் வாசிகள் இருவரை நாங்கள் கைது செய்துள்ளோம். இதனால் இந்த வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது." என்று சூரத் காவல்துறை ஆணையர் ஆர்.எம்.எஸ். பிரார் தெரிவித்தார்.
இவர்கள் இருவருக்கும், அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முஃப்தி அபு பஷீர், சாஜித் மன்சூரி, யூனுஸ் மன்சூரி, சம்சுதீன் ஷேக் ஆகியோருக்கும் தொடர்புள்ளது. சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்களான இவர்கள் சூரத்தில் வெடிகுண்டுகளை வைத்த குற்றத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று குஜராத் டி.ஜி.பி. பி.சி. பாந்தே தெரிவித்தார்.