ஒரிசாவில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்து வரும் கலவரங்களைக் கட்டுப்படுத்தக் கண்டவுடன் சுட உத்தரவிடப்பட்டு உள்ளது. பதற்றம் நிறைந்த கந்தமால் மாவட்ட நிலைமையை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் விரைந்துள்ளார்.
ஒரிசாவில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் லக்ஷ்மானந்தா உட்பட 5 பேர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்து வரும் கலவரங்களில் இதுவரை 14 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 9 பேருடைய சாவை அரசு தரப்பு உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், பதற்றம் நிறைந்த கந்தமால் மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை மீறி இன்று நான்காவது நாளாக வன்முறைகளும், கலவரங்களும் தொடர்வதால், கண்டவுடன் சுட உத்தரவிடப்பட்டு உள்ளதாக மண்டல வருவாய் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
பலிகுடா, உதய்கிரி ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுடன், பெருமளவில் வந்த மர்மக் கும்பல் மோதலில் ஈடுபட்டதாகவும், தடிகளுடன் இரும்புக் கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் அவர்கள் வைத்திருந்ததாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
ராய்கா போன்ற வனப் பகுதிகளில் பதுங்கியுள்ள மர்மக் கும்பல் அவ்வப்போது காவல் அதிகாரிகளைத் தாக்கி வருவதாகவும், இதில் 2 அதிகாரிகள் படுகாயமடைந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரிசாவில் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால்!
இதற்கிடையில் கலவரத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் நிலைமையை ஆராய்வதற்காக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் ஒரிசா விரைந்தார்.
கந்தமால் மாவட்டத்தில் பரவிவரும் வன்முறைகள் குறித்து பிரதமரும் உள்துறை அமைச்சரும் கவலை தெரிவித்துள்ளதாக புவனேஷ்வரில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
வி.எச்.பி. தலைவர் சக்ஷ்மானந்த சரஸ்வதி கொல்லப்பட்ட மூன்று நாட்களாகியும் கந்தமால் மாவட்டத்தில் கலவரங்கள் கட்டுக்குள் வரவில்லை என்பது கவலை அளிப்பதாகத் தெரிவித்த அவர், ஒரு குழுவினருடன் அங்க செல்லவுள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னதாக, ஒரிசா மாநில ஆளுநர் எம்.சி.பந்தாரே, தலைமைச் செயலர் அஜித் குமார் திரிபாதி, உள்துறைச் செயலர் டி.கே.மிஸ்ரா, டி.ஜி.பி. கோபால் நந்தா ஆகியோருடன் அமைச்சர் ஜெஸ்வால் ஆலோசனை நடத்தினார்.