கோத்ரா கலவரங்கள் தொடர்பான பல்வேறு முக்கிய வழக்குகளில் விசாரணை நடத்தி வரும் மத்திய புலனாய்வுக் கழகத்தின் (ம.பு.க.) முன்னாள் இயக்குநர் ஆ.கே. ராகவன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31 வரை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத், பி.சதாசிவம், அஃப்தாப் ஆலம் ஆகியோர் கொண்ட அமர்வு, சிறப்புப் புலனாய்வுக் குழு கேட்டுக்கொண்டதற்கு இணங்க காலக்கெடுவை நீட்டித்தது.
முன்னதாக, குற்றம்சாற்றப்பட்ட சிலரின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ். துளசி, குற்றம்சாற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் பிணை மனுக்களை ரத்து செய்ததன் மூலம், ஒரே உத்தரவில் அரசியல் சட்டம் வழங்கும் உரிமையை உச்ச நீதிமன்றம் துண்டித்து விட்டது என்றும், இதனால் அந்தப் பிணை மனுக்களை பிற நீதிமன்றங்களும் பரிசீலிக்க முடியாதபடி ஆகிவிட்டது என்றார்.
பிணை மனுக்கள் விடயத்தில் உச்ச நீதிமன்றம்தான் ஏதாவது செய்ய முடியும் என்று பிற நீதிமன்றங்கள் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வாதத்தைக் கேட்டு கோபமடைந்த நீதிபதி பசாயத், குரலை உயர்த்த வேண்டாம் என்று வழக்கறிஞர் துளசியைக் கண்டித்ததுடன், அவர் கூறுவதைப் போல உச்ச நீதிமன்றம் எதையும் கூறவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
2002இல் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவரங்கள் தொடர்பாக விசாரிக்க, குஜராத் காவல் அதிகாரி ஒருவர், உத்தரப்பிரதேச காவல் அதிகாரிகள் இருவர் ஆகிய மூன்று மூத்த அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவினை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
இந்தக் குழு தனது இடைக்கால அறிக்கையை ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விட்டது.