Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெனிவா பேச்சுவார்த்தை: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – ஏ.பி.பரதன்!

ஜெனிவா பேச்சுவார்த்தை: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – ஏ.பி.பரதன்!
, செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (19:13 IST)
ஜெனிவாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையில் இந்தியா ஒப்புக்கொண்ட மற்றும் நிராகரித்த அம்சங்கள் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் கோரியுள்ளார்.

webdunia photoFILE
ஜெனிவா பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்குப் பிறகு இந்தியா வந்த உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குனர் பாஸ்கல் லாமி, முன்னேறிய நாடுகளுக்கும், இந்தியா உள்ளிட்ட முன்னேறிவரும் நாடுகளுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தகம் தொடர்பான பிரச்சனைகள் 20இல் 17இல் உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக கூறினார்.

இதுகுறித்து வெள்ளையறிக்கை வெளியிட்டு மக்களுக்கு மத்திய அரசு விளக்கவேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்குத் தான் எழுதிய கடிதத்தை செய்தியாளர்களிடம் வெளியிட்டுப் பேசிய பரதன்,எந்தந்தெந்த அம்சங்களில் உடன்பாடு ஏற்பட்டது என்பதையும், எந்தெந்த பிரச்சனைகளில் உடன்பாடு ஏற்படவில்லையென்பதையும் வெள்ளை அறிக்கை வெளியிட்டு விளக்கவேண்டும் என்றார்.

பாஸ்கல் லாமி இந்தியா வந்திருந்தபோது அறிக்கை ஒன்றை வெளியிட்ட மத்திய வர்த்தகத் துறைச் செயலர், சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பிரச்சனையில் அமெரிக்காவை இணங்கச் செய்தால் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்தியா தயாராக உள்ளதென கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டிய பரதன், எந்த அடிப்படையில் அமெரிக்காவை இணங்கச் செய்வது என்று வர்த்தகச் செயலாளர் கூறியுள்ளார் என்பதை விளக்க வேண்டும் என்று கோரினார்.

கடந்த ஜூலை மாதம் 21 முதல் 29ஆம் தேதிவரை ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தையில் வேளாண்மைத் தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு (Special Safeguards Mechanism - SSM) தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில், இந்தியா உள்ளிட்ட முன்னேறிவரும் நாடுகள் தங்கள் நாட்டின் மொத்த வேளாண் உற்பத்தியில் 40 விழுக்காடு அளவிற்கு மற்ற நாடுகளின் இறக்குமதிக்கு திறந்துவிட வேண்டும் என்று அமெரிக்கா கோரியது.

இதனை நிராகரித்த இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள், 10 விழுக்காடு அளவிற்கு மட்டுமே முன்னேறிய நாடுகளின் பொருட்களுக்கு சந்தையைத் திறந்துவிட முடியும் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பருத்திக்கு வழங்கும் மானியத்தைக் குறைப்பது, அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil