காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடரும் போராட்டங்களால் ஊரடங்கு உத்தரவு மூன்றாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. காவலர்களின் துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு- காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் நேற்று காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை மீறி நடத்தப்பட்ட போராட்டங்களில் மூண்ட கலவரங்களிலும், அதைக் கட்டுப்படுத்தப் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டிலும் 4 பேர் கொல்லப்பட்டதுடன் 80 பேர் காயமடைந்தனர். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை டால்கேட் என்ற பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், பந்திபோரா மாவட்டத்தில் ஹஜன் என்ற இடத்தில் நேற்றுப் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பஷீர் அகமது பஹார் என்பவர் மருத்துவமனையில் இன்று பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில், பிரிவினைவாத அமைப்புகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில இடங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிப் போராட்டம் நடத்துவதைக் காவலர்கள் தடுத்ததால், அவர்களுடன் போராட்டக்காரர்கள் மோதலில் இறங்கினர்.