ஜம்மு- காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது பற்றிக் கவலை தெரிவித்துள்ள இந்தியா, சண்டை நிறுத்தம் உறுதியாகக் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இரு தரப்பு அமைதிப் பேச்சுக்கள் வலுவடைந்துள்ள நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் பாகிஸ்தான் படையினரின் அத்துமீறிய தாக்குதல் நடவடிக்கைகளும், தீவிரவாதிகளின் ஊடுருவல்களும் கவலை அளிக்கிறது என்று மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.
பாகிஸ்தான் தரப்பில் சண்டை நிறுத்தம் உறுதியாகக் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், "இதுபோன்ற அத்துமீறல்களைத் தடுக்கத் தேவையான எல்லா முயற்சிகளையும் நமது படையினர் மேற்கொண்டு வருகின்றனர். நிலைமையைக் கட்டுப்படுத்த அவர்களால் முடியும். எல்லையில் எந்தவிதமான சவாலையும் சந்திக்கத் தயாராக நமது படையினர் உள்ளனர். எனவே கவலைக்கு இடமில்லை." என்றார்.
இந்த ஆண்டு மார்ச் முதல் ஜூலை வரை 130 க்கும் மேற்பட்ட ஊடுருவல் முயற்சிகள் நடந்துள்ளது பற்றிக் கேட்டதற்கு, "கடந்த 2 மாதங்களில் ஊடுருவல் முயற்சிகள் அதிகரித்துள்ளன. அவற்றை நமது படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். ஊடுருவலைத் தடுக்க பாகிஸ்தானின் ஒத்துழைப்பு அவசியம்" என்றார் அமைச்சர் அந்தோணி.