அப்பாவி மக்களுக்கு எதிராகப் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தப்படுவதற்குக் காரணமான அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்யாவிட்டால், அரசுடனான பேச்சில் இருந்து வெளியேறுவோம் என்று ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதி அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என். வோரா அமைத்துள்ள குழுவுடன் கடந்த சனிக்கிழமை பேச்சு நடத்திய ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதி அமைப்பு, மூன்று மூத்த காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் வரை அரசுடன் பேச்சைத் தொடரப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.
ஜம்மு மண்டல ஐ.ஜி. கே.ராஜேந்திர குமார், ஜம்மு முதுநிலை காவல்துறை கண்காணிப்பாளர் மனோகர் சிங், கத்துவா மாவட்ட முதுநிலை காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.பி.பனி ஆகிய குறிப்பிட்ட மூன்று காவல் அதிகாரிகளும், அப்பாவி மக்களின் மீது படையினரை ஏவி விடுவதாக ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதி குற்றம்சாற்றியுள்ளது.
இதனால், அமர்நாத் கோயில் நில மாற்ற விவகாரத்தை தீர்க்கும் முயற்சிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
59 ஆவது நாளாகப் பதற்றம்!
இதற்கிடையில், அமர்நாத் கோயில் நில மாற்ற விவகாரத்தில் நடந்து வரும் தொடர்ச்சியான போராட்டங்களால் ஜம்மு பகுதி முழுவதும் 59 ஆவது நாளாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு உள்ளதால் பதற்றம் நீடிக்கிறது.
ஜூன் 29 முதல் சாலை மறியல் போராட்டங்கள் நீடித்து வருவதால் தனியார், பொதுப் போக்குவரத்துத் தடைபட்டுள்ளது. இதனால், அரசு அலுவலகங்கள், வங்கிகளின் செயல்பாடு முடங்கியுள்ளது.
கத்துவாவில் இன்று ஊரடங்கு உத்தரவு சிறிது நேரம் தளர்த்தப்பட்டது. ஆனால், காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பல இடங்களில் நடந்த மோதல் காரணமாக மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பூஞ்ச், கிஸ்த்வார் உள்ளிட்ட பதற்றம் நிறைந்த பகுதிகளில் தொடர்ந்து 4 ஆவது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அதிருப்தியடைந்துள்ள பொதுமக்கள் சில இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.