அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை பெறுவதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க முடியாது என்றும், அணு சக்தி தொழில்நுட்ப வணிகத்திற்கு விலக்குடன் கூடிய அனுமதி அளிப்பதற்காக அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு (என்.எஸ்.ஜி.) புதிய நிபந்தனைகளை விதித்தால் அதை ஏற்க முடியாது என்றும் இந்திய அணு சக்தி ஆணையத் தலைவர் அனில் ககோட்கர் கூறியுள்ளார்.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு இந்தியாவை ஒருபோதும் நிர்ப்பந்திக்க முடியாது என்று தெளிவுபடுத்திய அவர், ஜூலை 18, 2005 அன்று விடுக்கப்பட்ட இந்திய- அமெரிக்க கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே என்.எஸ்.ஜி. அளிக்கும் விலக்குடன் கூடிய அனுமதியை இந்தியா ஏற்றுக்கொள்ளும் என்று உறுதியளித்தார்.
மும்பையில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ககோட்கர், என்.எஸ்.ஜி. நிபந்தனைகள் பற்றிக் கூறுகையில், "எந்தவிதமான புதிய நிபந்தனைகளும் இல்லாத, ஏற்றுக்கொள்ளத்தக்க விலக்குடன் கூடிய அனுமதியை என்.எஸ்.ஜி.யிடம் இந்தியா எதிர்நோக்கியுள்ளது. ஜூலை 18, 2005 அன்று வெளியிடப்பட்ட இந்திய- அமெரிக்க கூட்டறிக்கையில் உள்ளதைத் தவிர வேறெந்தக் கட்டுப்பாடுகளையும் ஏற்க முடியாது. அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் முக்கியம்தான். அதற்கு அர்த்தம் என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்பதல்ல" என்றார்.
விலக்குடன் கூடிய நிபந்தனையற்ற அனுமதி வேண்டி இந்தியா முன் வைத்துள்ள வரைவில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று என்.எஸ்.ஜி. நாடுகள் வற்புறுத்தியுள்ளதாக வெளியான தகவல்கள் பற்றிக் கேட்தற்கு, "நம்மை வற்புறுத்த நாம் அனுமதிக்கலாமா? நாம் இந்தியர்கள் இல்லையா? நம்மைப் பற்றி நாம் பெருமை கொள்ளவில்லையா? நீங்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார் ககோட்கர்.