அமர்நாத் நில மாற்ற விவகாரத்தில் ஜம்மு- காஷ்மீரில் நடந்து வரும் போராட்டங்கள் பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், நமது நாட்டின் சமூக, மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் எந்த முயற்சியையும் அனுமதிக்க முடியாது என்றும், நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அஸ்ஸாமில் பொது நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் பெருமை மிகுந்த சமூக, பண்பாட்டு நல்லிணக்கம் கேள்விக்கு உட்படுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளதுடன், எந்தவிதமான பிரச்சனைக்கும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு ஜனநாயகமான முறையில் பேச்சு நடத்தி மட்டுமே தீர்வு காண முடியும் என்று வலியுறுத்தினார்.
"வேறுபட்ட நம்பிக்கைகள், மொழி, மதம் உள்ளிட்டவற்றினால் சிலர், தாங்கள் இந்தியர்களாக இருப்பதை விரும்பாமல் இருக்கலாம். சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் எந்தவித முயற்சியும் அனுமதிக்கப்படாமல் இருப்பதை நாம் ஒன்றுபட்டு உறுதி செய்ய வேண்டும். சமூக, மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களை நாம் தனிமைப்படுத்த வேண்டும்" என்று பிரதமர் தனது உரையில் கூறியுள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் பிரச்சனையானாலும், அஸ்ஸாம் பிரச்சனையானாலும் பேச்சின் மூலம் தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பிரதமர், அஸ்ஸாமைப் பொறுத்தவரை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்நி காலத்தில் இருந்தே அமைதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
அஸ்ஸாம் மாநிலம் நகானில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் வந்த ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாகத் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால், ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட உரை அவரது சார்பில் படிக்கப்பட்டது.