காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை மீறிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களின் மீது காவலர்கள் நடத்திய தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியானதுடன் 75க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று தடையை மீறிப் போராட்டம் நடத்தக் குவிந்த பிரிவினைவாத அமைப்புகளின் தொண்டர்கள், பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. சபாபோரா, ஹஜின், லால் செளக் உள்ளிட்ட பகுதிகளில் மோதல்கள் நடந்துள்ளன.
ஸ்ரீநகர்- முசாபராபாத் சாலையில் உள்ள நர்பால் என்ற இடத்தில் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
லால் செளக் பகுதியில் காவலர்கள் நடத்திய தடியடி, கண்ணீர்ப் புகை குண்டு வீச்சில் 15 பேர் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் நடத்திய கல்வீச்சில் காவலர்கள் 4 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல ஹிரீ, குப்வாரா, பட்மலூ உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீருக்குள் நுழைய அனுமதிக்க வேண்டிப் பல்வேறு அமைப்புகள் நடத்திய போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவலர்கள் முயற்சி மேற்கொண்டபோது இருதரப்பிற்கும் இடையில் கடும் மோதல் வெடித்தது.
இதையடுத்துக் காவலர்கள் நடத்திய தடியடி, கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு ஆகியவற்றில் 4 பேர் பலியானதுடன் 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
பொது மக்கள் போராட்டத்தில் தடியடி!
ஜம்மு- காஷ்மீரில் இன்று பல்வேறு அமைப்புகளின் போராட்ட அறிவிப்புகளையொட்டி முன்னெச்சரிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள காலவரையற்ற ஊரடங்கு உத்தரவினால் பொது மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதனால் பல்வேறு இடங்களில் பொது மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறித் தெருக்களில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கைளத் தடையின்றி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புச்வாரா டால்கேட் என்ற இடத்தில் மத்திய ரிசர்வ் காவலர்கள் நேற்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானதுடன், பலர் காயமடைந்துள்ளதை கண்டித்தும், அதற்குக் காரணமான காவலர்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலவரையற்ற ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் பெருமளவில் பங்கேற்றனர்.
முன்னதாக நேற்று மத்திய ரிசர்வ் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடில், தெருவில் நடந்து சென்ற தந்தையும் மகனும் தாக்கப்பட்டனர். இதில் தந்தை பலியானார், மகன் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
6 பத்திரிகையாளர்கள் காயம்!
ஊரடங்கு உத்தரவின் இடையில் தங்கள் பணியில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர்களின் மீது மத்திய ரிசர்வ் காவல்படையினர் நடத்திய தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ளூர் ஊடகங்களின் செயல்பாடு இன்று இரண்டாவது நாளாக முடங்கியுள்ளது.
சில இடங்களில் போராட்டக்காரர்களின் தாக்குதலிற்கு ஊடகங்களின் வாகனங்கள் இலக்காகியுள்ளன. முறையான அடையாள அட்டையை இல்லாமல் பயணிக்கும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.