அமர்நாத் கோயில் நில மாற்ற விவகாரத்தில் பல்வேறு அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றினால் ஜம்மு- காஷ்மீரில் அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்- முசாபராபாத் சாலையை வர்த்தகத்திற்குத் திறந்துவிட வேண்டும், இதுவரை கைது செய்யப்பட்டுள்ள பிரிவினைவாதத் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஹூரியத் மாநாடு, மற்ற பிரிவினைவாத அமைப்புகள், காஷ்மீர் வழக்கறிஞர் சங்கம் ஆகியவை கொண்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த காரணத்தால், நேற்று (ஞாயிற்றுகிழமை) அதிகாலை 4.00 மணி முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் திடீர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள பொதுமக்கள், ஊரடங்கு உத்தரவு திடீரென்று அமல்படுத்தப்பட்டுள்ளதால், தங்களால் பால், காய்கறிகள், ரொட்டி ஆகிய உணவுகளை சேமித்து வைக்க முடியவில்லை என்றும், அத்தியாவசியப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தங்களிடம் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் சுத்தமாக இல்லை என்பதால், பட்டினி கிடக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர். பொது வினியோகக் கிடங்குகள், ரேஷன் கடைகள் ஆகியவற்றிலும் போதுமான இருப்பு இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாட்மலூ, டால்கேட், சோனாவார், ரைனாவாரி, நெளகாம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் பொருட்கள் இல்லாததால் 2 வாரங்களாக மூடப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
"தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் உணவுப் பொருட்களும், அத்தியாவசியப் பொருட்களும் ஜம்மு- காஷ்மீருக்கு வருவதாக அரசு தெரிவித்துள்ள நிலையில், அந்தப் பொருட்கள் எல்லாம் எங்கே போனது?" என்று கேள்வி எழுப்பியுள்ள பொதுமக்கள், பாதுகாப்புப் படையினருக்கும், அரசு ஊழியர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கும்தான் அவை வினியோகம் செய்யப்படும் என்று குற்றம்சாற்றினர்.
ஸ்ரீநகரில் உள்ள ஜி.பி. மருத்துவமனையில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மருத்துவமனைக்கு மருந்துகள், ரொட்டிகள் ஆகியவற்றை எடுத்து வந்த வாகனத்தை பாதுகாப்புப் படையினர் தடுத்து விட்டதாக அதன் ஓட்டுநர் குற்றம்சாற்றினார்.