ஹுரியத் மாநாட்டு இயக்கத்தினர் நாளை ஸ்ரீநகர் லால் சவுக் பகுதியில் பேரணி நடத்த போவதாக அறிவித்து உள்ளனர். இதையடுத்து காஷ்மீரில் இன்று காலை முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அமர்நாத் பிரச்சினையில் உரிய தீர்வுகாண தவறிவிட்டதாக கூறி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஸ்ரீநகர் லால்பாக் பகுதியில் நாளை முஸ்லீம் பிரிவினைவாத இயக்கங்கள் பேரணி நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தப் பேரணியின் போது பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள், மிர்வாய்ஸ் உமர் பரூக், செய்யது அலி ஷா கிலானி, யாசீன் மாலிக் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு செய்திதொடர்பாளர் ஒருவர் கூறினார்.
இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயாஸ் அக்பர் உள்பட 24க்கும் மேற்பட்டோரை காவல் துறையினரும், துணை ராணுவப் படையினரும் அவர்களை வீட்டுக்காவலில் வைத்துள்ளதாக ஹூரியத் இயக்க செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.