அமர்நாத் கோயில் நில மாற்ற விவகாரத்தில் ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதி அமைப்பிற்கும், ஜம்மு- காஷ்மீர் அரசிற்கும் இடையில் நடந்த இரண்டு சுற்றுப் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இரு தரப்பும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எட்டுவதற்காக மீண்டும் கூடிப் பேசவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசித்து வணங்குவதற்காக வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் இளைப்பாற ஓய்விடங்களை அமைக்கும் வகையில், ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியத்திற்கு வனத்துறை நிலத்தை வழங்குவது தொடர்பாக நடந்து வரும் போராட்டங்களால் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது.
இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணும் வகையில் அம்மாநில ஆளுநர் என்.என். வோரா அமைத்துள்ள குழுவிற்கும், போராட்டங்களை நடத்தி வரும் ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதி அமைப்பிற்கும் இடையில் இன்று இரண்டாவது கட்டமாக இரண்டு சுற்றுப் பேச்சுக்கள் நடந்தன.
முற்பகலில் நடந்த முதல் சுற்றுப் பேச்சில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், பிற்பகல் நடந்த இரண்டாவது சுற்றுப் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இரு தரப்பும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
"பேச்சு சுமூகமாக நடந்தது. அரசு தரப்பில் சில பரிந்துரைகள் வழங்கப்பட்டன. அவற்றை நாங்கள் பரிசீலிப்போம். எங்களின் முக்கியக் கோரிக்கையான ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியத்திற்கு நிலம் வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அடுத்த சுற்றுப் பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம்." என்று ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதி அமைப்பாளர்களில் ஒருவரான பிரிகேடியர் சச்செட் சிங் தெரிவித்தார்.
ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதியின் சார்பில் திலக் ராஜ் சர்மா, பவான் கோஹ்லி, நரீந்தர் சிங், பிரிகேடியர் சச்செட் சிங் ஆகியோரும், அரசு தரப்பில் எஸ்.எஸ்.பெலோரியா, ஜம்மு பல்கலைக்கழகத் துணை வேந்தர் அமிதாப் மாட்டூ, ஜம்மு- காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.டி.சர்மா, பி.பி.வியாஸ் ஆகியோரும் பேச்சில் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக இரண்டு தரப்பிற்கும் இடையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி நடந்த முதல்கட்டப் பேச்சு எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் முறிந்தது குறிப்பிடத்தக்கது.