உடல் உழைப்பு துப்பரவு தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.180 ஆக நிர்ணயிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தேசிய உடல் உழைப்பு துப்பரவு தொழிலாளர் ஆணையத் தலைவர் சந்தோஷ் சௌத்திரி கூறினார்.
தமிழகத்தில் உடல் உழைப்பு துப்பரவு தொழிலாளர்களின் நிலை குறித்து ஆராய்வதற்காக இன்று சென்னை வந்த தேசிய உடல் உழைப்பு துப்பரவு தொழிலாளர் ஆணையத் தலைவர் சந்தோஷ் சௌத்திரி, வங்கிகளில் உள்ள துப்பரவு தொழிலாளர்களின் நிலை குறித்து இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கித் தலைவர்கள், அதிகாரிகள், தாட்கோ நிறுவன உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் இவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஏ பிரிவு நகரில் வசிக்கும் உடல் உழைப்பு துப்பரவு தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.180-உம், பி பிரிவு நகரில் வசிக்கும் உடல் உழைப்பு துப்பரவு தொழிலாளர்களுக்கு ரூ.150-உம், சி பிரிவு நகரில் வசிக்கும் உடல் உழைப்பு துப்பரவு தொழிலாளர்களுக்கு ரூ.120-உம் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை அரசு ஏற்றுள்ளது." என்று தெரிவித்தார்.
மேலும், "உடல் உழைப்பு துப்பரவு தொழிலாளர் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது இறந்து போனால் அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பகுதி நேரங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை ஆணையம் அரசிடம் அளித்துள்ளது. இது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுப்பதாக உறுதி கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 22 ஆயிரம் உடல் உழைப்பு துப்பரவு தொழிலாளர்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தேசிய துப்பரவு தொழிலாளர் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ.57.80 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் ரூ.24.52 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.33.28 கோடி பயன்படுத்தப்படவில்லை. தவிர ஒருங்கிணைந்த குறைந்த செலவு சுகாதாரத் திட்டத்தின் கீழ் ரூ.24.63 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மற்றும் ரூ.7.6 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 83 நகரங்கள் மட்டுமே உடல் உழைப்பு துப்பரவு தொழிலாளர் இல்லாத நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் உடல் உழைப்பு துப்பரவு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இலவச பாடப் புத்தங்கள், சீருடைகள், சிறப்பு பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ.152.50 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாம்பே திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ.77.12 கோடி ஒதுக்கப்பட்டது. இதுவரை 1,04,055 வீடுகள், 23,580 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 17,162 வீடுகள், 350 கழிப்பறைகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. முழு சுகாதாரத் திட்டத்தின் கீழ் மத்திய மாநில அரசுகள் ரூ.398.53 கோடி ஒதுக்கப்பட்டு அதில் ரூ.320.02 கோடிக்கான பணிகள் நடைப்பெற்றுள்ளன." என்றும் சந்தோஷ் சௌத்திரி தெரிவித்தார்.