ஜம்முவில் இயல்பு நிலை நீடிப்பதையொட்டி இன்றும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. காஷ்மீரில் நடந்து வரும் போராட்டங்களால் பதற்றம் நீடிக்கிறது.
ஜம்மு மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுகிறது என்று மாவட்ட நீதிபதி டாக்டர் மந்தீப் கே. பண்டாரி தெரிவித்தார்.
பகல் நேரங்களில் அவ்வப்போது நிலைமையை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், இரவு நேரங்களில் இன்னும் சில நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இருந்தாலும், அமர்நாத் கோயில் வாரியத்திற்கு நிலம் வழங்கும் விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியவர்களின் மீது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டித்து வடக்கு காஷ்மீரில் போராட்டங்கள் நீடிக்கின்றன.
ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதி அமைப்பினர் இன்றும் அமர்நாத் கோவில் வாரியத்திற்கு ஆதரவாகப் போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளதால் ஜம்முவைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது.
காஷ்மீரில் இரண்டாவது நாளாக இன்றும் பல்வேறு கல்வி நிலையங்களில் பாதுகாப்புப் படையினரைக் கண்டித்து மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். ஹூரியத் மாநாட்டு கட்சியைச் சார்ந்த அமைப்பினர் சாலை மறியல் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.