அமர்நாத் கோயில் நில மாற்ற விவகாரம் தொடர்பாக ஜம்மு- காஷ்மீரில் பெரும் போராட்டங்கள், வன்முறைகள் நடந்து வருவதையடுத்து அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், தற்போதைய நிலவரம் குறித்து மத்திய அமைச்சரவையிடம் விளக்கினார்.
தலைநகர் டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், எம்.கே. நாராயணன் பங்கேற்று, ஜம்மு- காஷ்மீர் நிலவரம் குறித்து விளக்கியதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி தெரிவித்தார்.
அமர்நாத் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அமைச்சரவையில் ஏதேனும் ஆலோசனை வழங்கப்பட்டதா என்று கேட்டதற்கு, பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கெனவே அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்து இந்தப் பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார் தாஸ்முன்ஷி.
ஜம்மு- காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட எம்.கே. நாராயணன், அம்மாநில ஆளுநர் என்.என். வோராவைச் சந்தித்து அமர்நாத் விவகாரத்தில் போராட்டம் நடத்தி வரும் எல்லாக் கட்சியினரையும் அழைத்துப் பேச்சு நடத்திப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்தார்.
சட்டம்- ஒழுங்கு, பாதுகாப்பு, பொது வினியோகம், நிர்வாகத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் எம்.கே. நாராயணன் ஆலோசித்தார்.
அவருடன், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங், கூட்டுப் புலனாய்வுக் குழுவின் தலைவர் எச். உபத்யாய, புலனாய்வுக் கழகத்தின் இயக்குநர் பி.சி.ஹல்தார், பிரதமர் அலுவலக இணைச் செயலர் சஞ்சய் மித்ரா ஆகியோரும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் எம்.கே. நாராயணனைச் சந்தித்துப் பேசினர்.