உலகின் பிற பகுதிகளுடன் இந்தியாவிற்கு உள்ள உறவுகளை அதிகரிக்கும் வகையில், மத்திய அயலுறவு அமைச்சகத்தில் 518 புதிய பணியிடங்களைத் தோற்றுவிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய பணியிடங்களில், 139 அதிகாரிகள், 110 பணியாளர்கள் ஆகிய 249 பணியிடங்கள் உள் நாட்டிலும், 175 அதிகாரிகள், 94 பணியாளர்கள் ஆகிய மீதமுள்ள 269 பணியிடங்கள் அயல்நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களிலும் தோற்றுவிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி தெரிவித்தார்.
பல்வேறு அமைச்சகங்கள் சார்ந்த பணிகளை அயல்நாடுகளுடன் மேற்கொள்வது தொடர்பாக கீதாகிருஷ்ணன் குழு அளித்துள்ள பரிந்துரைகளின்படி இந்தப் புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
மேலும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலர் பதவியை உருவாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.