'நிலத்தடி நீர் ஆய்வு, கண்டறிதல், புலனறிதல்', 'தற்போதைய நிலத்தடி நீர் ஆணையம்', 'நிலத்தடி நீர் புதுப்பித்தல் ஆய்வு' ஆகிய மூன்று திட்டங்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள 'நிலத்தடி நீர் நிர்வாகம், ஒழுங்குமுறைத் திட்டம்' என்ற மேம்படுத்தப்பட்ட திட்டத்தை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் பிரதமர் மனமோகன் சிங் தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்தத் திட்டம் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டதுடன், 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தத் திட்டத்திற்கு ரூ.460 கோடி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட பகுதிகளைத் தேர்ந்தெடுத்து நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல், மழை நீர் சேகரிப்புத் திட்டங்களை ஊக்குவித்தல், செயற்கைக்கோள் உதவியுடன் நிலத்தடி நீர் மட்டத்தைக் கண்டறிந்து உயர்த்த நடவடிக்கை எடுத்தல், நீராதாரங்களைப் புதுப்பித்து உயிர்ப்பித்தல், நீர்வளம் தொடர்பான ஆய்வுகளை ஊக்குவித்தல், அதில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.