இணையத்தின் வழியாக தொலைக்காட்சி (Inter protocol Television-IPTV) சேவைகளை வழங்க வகைசெய்யும் ஒளிபரப்பு வழிகாட்டு நெறிமுறைகளில் செய்யப்பட்டுள்ள திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன் மூலம் தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் சேவைகளை அதிவேக இணையத் தொடர்பை பயன்படுத்தி வணிக ரீதியாக சேவை அளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பொதுத் துறை தொலைத் தொடர்பு நிறுவனங்களான எம்.டி.என்.எல்., பி.எஸ்.என்.எல்., தனியார் நிறுவனங்களான பார்த்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஆகியன இச்சேவையை அளிப்பதற்கான தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குமேல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் மட்டுமின்றி இணையத்தின் வாயிலாக கணினியிலேயே கண்டுகளிக்கலாம். அதற்கும் தொலைக்காட்சி வரிசைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) நெறிமுறை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.