மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து இடதுசாரித் தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தினால், இடது முன்னணி ஆளும் மேற்கு வங்காளம், கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நாட்டின் பிற பகுதிகளில் ரயில், சாலை மற்றும் விமானப் போக்குவரத்துக்களில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகரிக்கும் பணவீக்கத்தைக் கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்தும் இடதுசாரித் தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்திற்கு மேற்கு வங்காளத்தில் அளும் இடது முன்னணி அரசு முழு ஆதரவளித்ததால், அம்மாநிலத்தில் ரயில், சாலை, விமானப் போக்குவரத்துகள் முழுமையாக முடங்கின.
கொல்கத்தா சால்ட் லேக் பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணிகள் முழுமையாக முடங்கின. விமான நிலையப் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தினால் கொல்கத்தா விமான நிலையத்தில் எல்லா விமானங்களின் வருகையும் புறப்பாடும் ரத்து செய்யப்பட்டன.
இதேபோல கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொழிற்சங்கத்தினர் நடத்திய மறியல் போராட்டங்களினால் ரயில் போக்குவரத்தும், சாலைப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
கேரளத்தில் இருந்து சென்னை வரும் ரயில்களில் சில தாமதமாக வந்ததாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.