ஒகேனக்கல் பகுதியில் கூட்டுச் சர்வே நடத்தாமல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றத் தமிழக அரசு முயற்சிக்குமானால், அந்தத் திட்டத்தை நிறுத்த உச்ச நீதிமன்றம் செல்வோம் என்று கர்நாடகா மிரட்டியுள்ளது.
பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் பாசவராஜ் பொம்மை, அரசியல் மற்றும் நிர்வாகக் கூட்டமைப்பின் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் தோல்வி ஏற்பட்டால், நமது ஜனநாயக நெறிமுறைகளின்படி உச்ச நீதிமன்றத்தை அணுகுவதுதான் எங்களுக்குள்ள ஒரே வழி என்றார்.
கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் நீர்ப் பங்கீட்டு அளவு பற்றி விளக்கமளித்தல், ஒகேனக்கல் பகுதியில் கூட்டுச் சர்வே நடத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசிற்கு ஒரு வார காலம் கெடு விதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக அரசு தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காவிடில், அடுத்த மாதம் பிரதமரைச் சந்தித்து பிரச்சனையை எடுத்துரைக்க அனைத்துக் கட்சி உறுப்பினர்களைக் கொண்ட குழுவினை கர்நாடக அரசு அமைக்கும் என்றார் அமைச்சர் பொம்மை.
ஒகேனக்கல் பகுதியில் கூட்டுச் சர்வே நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளதைக் குறிப்பிட்ட அவர், கர்நாடக மாநில அரசுடன் மத்திய அரசு சரிவர ஒத்துழைப்பது இல்லை என்று குற்றம்சாற்றினார்.
மேலும், "ஒகேனக்கல் விடயத்தில் எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. கூட்டுச் சர்வே நடத்தும் வரை தமிழக அரசு தனது திட்டத்தை நிறைவேற்றக் கூடாது. அதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும்" என்றும் பொம்மை வலியுறுத்தினார்.
தமிழக அரசு அதிகாரிகள் தங்களுடன் சரிவர ஒத்தழைப்பது இல்லை என்று குற்றம்சாற்றிய அவர், கூட்டுச் சர்வே நடத்துவது பற்றி ஆலோசிக்க விடுக்கப்பட்ட அழைப்பை அவர்கள் நிராகரித்த வருவதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில், இன்று சென்னை வந்துள்ள கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, ஒகேனக்கல் விவகாரம் தொடர்பாகத் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசவுள்ளார்.