உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியத்திற்கு 100 ஏக்கர் நிலத்தைத் தர வேண்டும் என்று வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களின் தலை நகரங்களிலும் நாளை முதல் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தப் போவதாக பா.ஜ.க. வின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு ஹைதராபாத்தில் இன்று அறிவித்தார்.
ஜம்மு- காஷ்மீரில் தற்போது நிலவும் பதற்றமான சூழலுக்கு ஆளும் காங்கிரஸ் கட்சிதான் முழு பொறுப்பு என்று குற்றம்சாற்றிய அவர், "காங்கிரஸ் மற்றம் அதன் கூட்டணிக் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றால் தூண்டி விடப்படும் ஜம்மு- காஷ்மீர் பிரச்சனை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடைப்பட்டதோ அல்லது ஜம்முவிற்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் இடைப்பட்டதோ அல்ல." என்றார்.
ஜம்மு- காஷ்மீருக்குத் தன்னாட்சி வழங்குவது தொடர்பாக ஜவஹர்லால் நேரு கொண்டிருந்த கொள்கைதான், ஜம்மு- காஷ்மீர் பிரச்சனைக்கு மூல காரணம் என்றும் வெங்கையா நாயுடு கூறினார்.
அமர்நாத் கோயில் வாரியத்திற்கு நிலம் வழங்குவதைத் தடுத்துப் பாகிஸ்தான் கொடிகளை ஏந்திப் போராடி வரும் பிரிவினைவாதிகளுக்கு எதிராக நீதி கேட்டுப் போராடும் அனைவரும் தேசியவாதிகள் மட்டுமின்றி நாட்டுப் பற்றாளர்கள் என்று வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.
மேலும், மத்திய அரசு தனது குறைந்த கால அரசியல் ஆதாயத்திற்காகவும், வாக்கு வங்கி அரசியலிற்காகவும் பிரிவினைவாதிகளிடம் சரணடைந்து விட்டதாகவும் அவர் குற்றம்சாற்றினார்.