மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 64-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
ராஜீவ் பிறந்தநாளையொட்டி புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீர் பூமியில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி உட்பட பலர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
சோனியாவுடன் அவரது மகனும், எம்.பியுமான ராகுல் காந்தி, பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரும் ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.
குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, மத்திய அமைச்சர்கள் சிவராஜ் பாட்டீல், முரளி தியோரா, டெல்லி முதல் அமைச்சர் ஷீலா தீட்சித் உட்பல பலர் அஞ்சலி செலுத்தியவர்களில் அடங்குவர். இந்த நாளையொட்டி சர்வமத பிரார்த்தனையும் நடைபெற்றது.
தமிழகத்தில் அஞ்சலி
ராஜீவ் பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னை கோட்டையில் உள்ள ராணுவ மைதானத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. முதல் அமைச்சர் கருணாநிதி இந்த உறுதிமொழியை படிக்க, தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் அதனை திரும்பச் சொல்லி உறுதி மேற்கொண்டனர்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி. தங்கபாலு, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பல பலர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.