நுகர்வோர்களுக்கு பதிவு செய்த 60 நாட்களுக்குள் புதிய எரிவாயு இணைப்புகளை வழங்கவும், ஏற்கெனவே உள்ள இணைப்புகளுக்கு தட்டுப்பாடின்றி சிலிண்டர்களை வழங்கவும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் இன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய பெட்ரோலியத் துறைச் செயலர் ஆர்.எஸ்.பாண்டே, "நுகர்வோர்களுக்கு பதிவு செய்த 60 நாட்களுக்குள் புதிய எரிவாயு இணைப்புகளை வழங்க வேண்டும் என்றும், அதற்குமேல் தாமதம் செய்யக் கூடாது என்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
"திருவிழாக் காலம் நெருங்கி வருவதால் எரிவாயு வினியோகத்தை தடங்கல் இல்லாமல் பராமரிக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே உள்ள இணைப்புகளுக்கு தட்டுப்பாடின்றி சிலிண்டர் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.
ஆலோசனைக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த மத்தியப் பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா, வாடிக்கையாளர்கள் தங்களின் குறைகளைப் பதிவு செய்ய மாவட்ட, மாநில, நாடு தழுவிய அளவில் குறைதீர்ப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், ஒவ்வொரு எண்ணெய் நிறுவனத்திற்கும் தனித்தனி முகமைகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் சர்தாக் பெஹூரியா கூறுகையில், சர்வதேச அளவில் கச்சா விலை உயர்ந்து வரும் நிலையில், மண்ணெண்ணெய், எரிவாயு, டீசல், பெட்ரோல் ஆகியவற்றின் விலைகளைக் குறிப்பிட்ட அளவிற்கு மேல் உயர்த்தக்கூடாது என்ற மத்திய அரசு முடிவின் விளைவாக, நஷ்டத்தைச் சமாளிப்பதற்காக, சில குறிப்பிட்ட கிடங்குகளில் மட்டும் விலை உயர்ந்த பிராண்டட் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விற்பது, புதிய எரிவாயு இணைப்புகள் வழங்குவதை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட முடிவுகளை பெட்ரோலிய நிறுவனங்கள் மேற்கொண்டன என்றார்.
"எங்களிடம் 6 முதல் 7 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிய எரிவாயு இணைப்பு வேண்டி விண்ணப்பித்துக் காத்திருக்கின்றனர். இதைச் சமாளிப்பதற்காக புதிதாக 10 லட்சம் சிலிண்டர்களை வாங்கத் திட்டமிட்டுள்ளோம்.
நாடு முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பெட்ரோல் நிலையங்களில், விலை உயர்ந்த பிராண்டட் மற்றும் சாதாரணம் ஆகிய இரண்டு வகை பெட்ரோல், டீசலும் தட்டுப்பாடின்றி கிடைக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.