நமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4,000க்கும் மேற்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படையினர், அந்தப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அமர்நாத் நில மாற்ற விவகாரத்தில் நடந்து வரும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அமர்நாத் நல மாற்ற விவகாரத்தில் நடந்து வரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தி இயல்பு வாழ்க்கையைப் பராமரிக்கப் போதுமான படைகள் இன்றி ஜம்மு- காஷ்மீர் மாநில அரசு தவித்து வருகிறது.
அதிவிரைவுப் படை, மத்திய ரிசர்வ் காவல்படை, துணை ராணுவம் உள்ளிட்டவற்றில் இருந்து பெருமளவிலான படையினர் ஏற்கெனவே குவிக்கப்பட்டு இருந்தாலும், இன்னும் படையினர் தேவைப்பட்டதால் எல்லைப் பாதுகாப்புப் படையின் உதவி நாடப்பட்டது.
இதனால் ராஜூரி மாவட்டத்தில் சுந்தர்பானி, ரம்பன் மாவட்டத்தில் தம்குண்ட்- மஹோர்- கூல் பகுதி ஆகிய இடங்களில் பணியில் இருந்த 4,000க்கும் மேற்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படையினர் விடுவிக்கப்பட்டு ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ளனர் என்று எல்லைப் பாதுகாப்புப் படை ஐ.ஜி. ஏ.கே. சரோலியா தெரிவித்தார்.