அமர்நாத் நில மாற்ற விவகாரத்தில் நடத்தி வரும் போராட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதென்று பல்வேறு அமைப்புகளும் இணைந்து எடுத்துள்ள முடிவினால் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்புகிறது.
பொருளாதாரத் தடையை முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி நடத்தி வந்த முழு அடைப்புப் போராட்டம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று பிரிவினைவாதிகள் அறிவித்துள்ளதால், கடந்த 11ஆம் தேதி முதல் எட்டு நாட்களாக ஸ்தம்பித்திருந்த காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு நிலை திரும்பியது.
பிரிவினைவாத அமைப்புகள், சமூக அமைப்புகள், வர்த்தக அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள் அகியவை இன்று முதல் மூன்று நாட்களுக்கு வழக்கம்போல இயங்கும்.
முழு அடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் சிறிது நிவாரணம் வழங்கும் பொருட்டு போராட்டம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம்போல இயங்கினாலும், அவற்றின் மீது போராட்டத்தை ஆதரிக்கும் விதமாக கறுப்புக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்றும் பிரிவினைவாதிகள் அறிவித்துள்ளனர். இதன்படி இன்று காலை வாகனங்களில் கறுப்புக் கொடிகளைக் காண முடிந்தது.
காஷ்மீரில் வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள கூட்டத்தில் அடுத்தகட்டப் போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும், அது மிகவும் கடுமையானதாக இருக்கும் என்றும் பிரிவினைவாதிகள் அறிவித்துள்ளனர்.
ஜம்முவில் ஊரடங்கு உத்தரவு தளர்வு!
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு நிலை திரும்பத் துவங்கியதை முன்னிட்டு ஜம்மு பகுதியில் உள்ள, ஜம்மு, சம்பா, உதம்பூர், கிஸ்த்வார் ஆகிய மவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்வு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜம்முவில் அதிகாலை 5.00 மணி முதல் 15 மணி நேரத்திற்கும், சம்பாவில் 9 மணி நேரத்திற்கும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுகிறது என்று பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
உதம்பூரில் அதிகாலை 5.00 மணி முதல் 17 மணி நேரத்திற்கும், பதற்றம் நிறைந்த கிஸ்த்வார் மாவட்டத்தில் காலை 7.00 மணி முதல் 3 மணி நேரமும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதி அறிவித்துள்ள மூன்று நாள் சிறை நிரப்பும் போராட்டம் இன்று இரண்டாவது நாளை அடைந்துள்ளது. நேற்று துவங்கிய போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் சிறைக்குச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தங்களது போராட்டத்திற்கு ஆதரவளிப்பவர்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை எந்தப் பேச்சிலும் பங்கேற்க மாட்டோம் என்று சமிதியின் ஓருங்கிணைப்பாளர் லீலா கரண் சர்மா மாநில அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாநில ஆளுநர் என்.என்.வோராவின் முதன்மைச் செயலர் பி.பி.வியாசிடம் தங்களது முடிவைத் தெரிவித்துள்ளதாகவும் லீலா கரண் சர்மா கூறினார்.