அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) புதிய மருந்துகளைக் கொடுத்து சோதனை செய்ததில் 49 குழந்தைகள் பலியாகி உள்ளது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தும்படி அதன் இயக்குநருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) கடந்த இரண்டரை ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ள மருத்துவச் சோதனைகளில் 49 குழந்தைகள் பலியாகியுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அந்நிறுவனம் அளித்துள்ள விவரத்தில் கூறப்பட்டுள்ளது.
நமது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து இன்று மத்திய சுகாதார அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரச் செயலர் நரேஷ் தயால், "மருத்துவச் சோதனைகளில் 49 குழந்தைகள் பலியாகியுள்ள விவரம் குறித்து உடனடியாக உயர்மட்டக் குழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு எய்ம்ஸ் இயக்குநருக்கு அமைச்சர் அன்புமணி உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் குழந்தைகளுக்கு புதிய மருந்து எதையும் கொடுத்துச் சோதனை செய்யவில்லை என்றும், 49 குழந்தைகளும் உடல்நலக் குறைவினால்தான் இறந்துள்ளன என்றும் எய்ம்ஸ் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
"இன்று நடந்த பரிசீலனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களின்படி குழந்தைகளுக்குப் புதிய மருந்துகள் எதையும் கொடுத்துச் சோதனை செய்யவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. 49 குழந்தைகளில் சில குழந்தைகளுக்கு வேண்டுமானால் சோதனையில் உள்ள மருந்துகளைக் கொடுத்திருக்கலாம். மற்ற குழந்தைகளுக்கு வழக்கமான மருந்துகள்தான் கொடுக்கப்பட்டுள்ளன." என்று எய்ம்ஸ் மகப்பேறு துறை தலைவர் வி.கே.பால் தெரிவித்தார்.