பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் பதவி விலகியுள்ளது அந்நாட்டின் உள்விவகாரம் என்று இந்தியா கூறியுள்ளது.
பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து பர்வேஸ் முஷாரஃப் விலகியுள்ளது பற்றிக் கருத்துக் கேட்டதற்கு, அது அந்த நாட்டின் உள்விவகாரம் என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
தனது சமீபத்திய பாகிஸ்தான் பயணம் பற்றிக் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாக இரு நாட்டு அயலுறவு செயலர்கள் கூட்டம் விரைவில் நடக்கும் என்றும் தெரிவித்தார்.
நவாஸ் ஷெரீஃப், ஆஷிப் அலி ஜர்தாரி, யூசுப் ரஷா கிலானி உள்ளிட்ட பாகிஸ்தான் தலைவர்கள், இந்தியாவின் நல்லுறவை மிகவும் விரும்புவதாகவும், அவர்களுடன் தான் நடத்திய பேச்சில் இருதரப்பு நல்லுறவுகள் தவிர பன்னாட்டு அரசியல் விவகாரங்களும் இடம்பெற்றதாகவும் அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.