அமர்நாத் நிலமாற்ற விவகாரத்தில் நடந்து வரும் போராட்டங்கள், வன்முறைகளால் ஜம்மு- காஷ்மீரில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கோயிலிற்கு பக்தர்களின் வருகை பெருமளவு குறைந்துள்ளது.
ஜம்மு- காஷ்மீரில் இன்று 49 ஆவது நாளாகப் போராட்டம் நடந்து வரும் நிலையில், ரியாஷி மாவட்டத்தில் உள்ள புனித நகரமான கட்ராவிற்கு பக்தர்கள் வருகை பெருமளவில் குறைந்து பதற்றம் நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்குள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கோயிலிற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7,90,075 பக்தர்கள் யாத்திரை வந்தனர். இது இந்த ஆண்டு 5,21,612 ஆகக் குறைந்துள்ளது. இதேபோல கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வரை 2,75,472 பக்தர்கள் வந்தனர். இது இந்த ஆண்டு 1,20,837 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக ஜம்மு- காஷ்மீர் முழுவதும் போராட்டங்கள் நீடித்து வருவதே, இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்று வைஷ்ணவி தேவி கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.