ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்க தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கிஸ்ட்வார் மாவட்டத்தில் உள்ள மலையோர கிராமமான ஹரூ-மஹோர் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது தீவிரவாதிகள் ஒரு இடத்தில் பதுங்கியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை சரணடையுமாறு வலியுறுத்தினர். ஆனால் தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். இதனால் பாதுகாப்பு படையினரும் எதிர்த் தாக்குதல் நடத்தினர்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளிடமிருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கி, கையெறி குண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்களும், வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.