Publish Date: Thu, 14 Aug 2008 (16:41 IST)
Updated Date: Thu, 14 Aug 2008 (16:41 IST)
மோசமான வானிலை காரணமாக புனித அமர்நாத் யாத்திரை மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று புறப்படவிருந்த குழுவினர், இந்த ஆண்டு யாத்திரையின் கடைசிக் குழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
"ஜம்மு, ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பஹல்காம், பால்டால் பகுதிகளில் நிலவும் வானிலையும் யாத்திரைக்கு ஏற்றதாக இல்லை" என்று ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி பவன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, அண்மையில் ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக இரண்டு முறை அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது.
வருகிற 16 ஆம் தேதி பெளர்ணமி தினத்துடன் இரண்டு மாத கால அமர்நாத் புனித யாத்திரை நிறைவுறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.