காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பாதுகாப்புப் படையினரின் கெடுபிடிகளை எதிர்த்து நடந்த போராட்டங்களைக் கட்டுப்படுத்தக் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த 4 நாட்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடுகளில் 25 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 600 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
பாதுகாப்புப் படையினரின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்து நேற்றிரவு முதல் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சஃபா கடல் என்ற இடத்தில் நடந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்தக் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடில் தன்வீர் அகமது ஹன்டூ என்ற இளைஞர் கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
இதேபோல வடக்கு காஷ்மீரில் போலு புல்வாமா என்ற கிராமத்தில் நடந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த முதலில் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியதாகவும், அது பலனளிக்காததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் மத்திய ரிசர்வு காவல்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தச் சம்பவத்தில் 30 க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்ததால மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.