மத்திய அரசு ஊழியர்கள், இராணுவத்தினர் ஆகியோரது ஊதிய உயர்வு தொடர்பாக ஆறாவது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளுக்கு, சில மாறுதல்களுடன் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, 50 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு சராசரியாக 21 விழுக்காடு ஊதிய உயர்வு கடந்த 2006, ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று இன்று பிரதமர் தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதனால் ஆண்டுதோறும் மத்திய அரசிற்கு கூடுதலாக ரூ.17,798 கோடி செலவாகும் என்றும், ஜனவரி 2006 முதல் முன்தேதியிட்டு நிலுவைத் தொகையை வழங்குவதற்கு ரூ.29,373 கோடி தேவைப்படும் என்றும் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் நீதிபதி பி.என்.கிருஷ்ணா தலைமையிலான ஆறாவது ஊதியக் குழு அளித்துள்ள பரிந்துரையில், முதல்நிலை அரசு ஊழியருக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,600 ஆக உயர்த்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை மத்திய அரசு ரூ.7,000 ஆக உயர்த்தியுள்ளது.
இதனால் மற்ற சலுகைகளுடன் சேர்த்து அரசு ஊழியர் பெறும் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.10,000 க்கும் மேல் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல ஆண்டு ஊதிய உயர்வு விகிதமும் 2.5 விழுக்காட்டில் இருந்து 3 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில், மாற்றியமைக்கப்பட்ட பணி மேம்பாட்டு உறுதித் திட்டத்தின் கீழ் அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் 3 பதவி உயர்வுகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
சாதாரண ஊழியர்கள் தங்களின் 10, 20, 30 வருடங்கள் ஆகிய அடிப்படையிலும், ஜவான்கள் 8, 16, 24 வருடங்கள் ஆகிய அடிப்படையிலும் பதவி உயர்வு பெறுவார்கள்.
அரசு ஊழியர்களுக்கு 2006 ஜனவரி முதல் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்படும். இந்த நிதியாண்டில் 40 விழுக்காடும். 2009- 10 நிதியாண்டில் மீதி 60 விழுக்காடும் வழங்கப்படும்.
இந்தத் தகவல்களைத் தெரிவித்த அமைச்சர் தாஸ்முன்ஷி, ஊதியக் குழு பரிந்துரைகளின் மற்ற சிறப்பம்சங்களை நாளை செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் சிறப்புரை ஆற்றுகையில் பிரதமர் தெரிவிப்பார் என்றார்.