ஆகஸ்ட் 17ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த கிரகணத்தை இந்தியா முழுவதும் பார்க்கலாம்.
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 01.06 மணிக்கு தொடங்கி அதிகாலை 4.15 மணி வரை 3 மணிநேரம் 9 நிமிடங்கள் ஏற்படுகிறது. அப்போது, சந்திரனின் ஒரு சிறு பகுதியில் பூமியின் கருநிழல் படிந்து செல்லும். இது பகுதி சந்திரகிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
நியூஸீலாந்து தவிர அண்டார்டிகா, ஆஸ்ட்ரேலியா, ஆசியாவில் வடகிழக்கு பகுதி தவிர மற்ற இடங்கள், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளில் இந்த பகுதி சந்திர கிரகணத்தைப் பார்க்கலாம்.
இந்த பகுதி சந்திர கிரகணத்தின் கருநிழல் ஆரம்பத்தை பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதி, ஜப்பானின் வடக்கு முனை, ரஷ்யாவின் வட கிழக்குப் பகுதிகளில் இருந்து காணலாம்.
இதன் நிறைவுறும் பகுதியை பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதி, தென் அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதி, கிரீன்லாந்தில் இருந்தும் காணலாம். இந்தியாவில் இந்த பகுதி சந்திர கிரகணத்தை நாடு முழுவதும் பார்க்கலாம். இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். அப்படிப் பார்ப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.