முழுவதுமாக நமது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பல்குழல் ஏவுகணை செலுத்தி 'பினாகா' , ஒரிசா மாநிலம் பாலசோரில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் உள்ள சந்திப்பூர் தளத்தில் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.
கடந்த 1995 முதல் பல்வேறு முறை சோதனை செய்யப்பட்டுள்ள 'பினாகா' பல்குழல் ஏவுகணை செலுத்தியை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளும் அதிகாரிகளும் இணைந்து பலகட்ட ஆய்விற்குப் பிறகு மேம்படுத்தி உள்ளனர் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
"துல்லியமாகத் தாக்குத் திறனையும், தாக்குப் பிடிக்கும் திறனையும் கண்டறிய நடத்தப்பட்ட இன்றைய சோதனை வெற்றியடைந்துள்ளது. இதன்மூலம், தற்போது பயன்பாட்டில் உள்ள பல்குழல் ஏவுகணை செலுத்திகளுக்கு ஓய்வுகொடுக்கும் நிலை உருவாகியுள்ளது" என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.
'பினாகா'வின் முதல் சுற்றுச் சோதனை இன்று மதியம் 12.14 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது என்று ராணுவ அதிகாரி அனுப் மல்ஹோத்ரா தெரிவித்தார். நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் பொன்விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்தச் சோதனை நடத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.
தற்போது நம்மிடம் உள்ள ஏவுகணை செலுத்திகள் மூலம் 6 முதல் 8 ஏவுகணைகளை 30 கிலோ மீட்டர் சுற்றளவிலான இலக்குகள் மீது 60 வினாடிகளில் ஏவ முடியும்.
'பினாகா' மூலம் 12 ஏவுகணைகளை 44 வினாடிகளில் 40 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள இலக்குகள் மீது துல்லியமாகச் செலுத்தித் தாக்க முடியும். இதனால் எதிரிகளின் பதுங்கு குழிகளையும், பாதுகாப்பு அரண்களையும் ஒட்டுமொத்தமாகத் தாக்கி அளிக்க முடியும்.
இன்றைய சோதனையில் 102 ஏவுகணைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 72 ஏவுகணைக் கொண்டு 6 சுற்றுக்களாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனைகள் அனைத்தும் வெற்றியடைந்துள்ளது.
இதையடுத்து 70 கிலோ மீட்டர் மற்றும் 120 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வகையில் ராக்கெட்டுகளை ஏவக்கூடியவாறு 'பினாகா'வை மேம்படுத்தும் பணி துவங்கப்பட உள்ளது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.