ஜம்மு- காஷ்மீரில் கடந்த 2 நாட்களாக நடந்த கலவரத்தில் பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
வன்முறையில் ஈடுபட்டவர்களின் மீது பாதுகாப்புப் படையினர் நேற்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3பேர் இன்று உயிரிழந்தனர்.
அமர்நாத் கோயிலிற்கு நிலம் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தினால் ஜம்மு- காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக காஷ்மீர் பகுதியில் உள்ள 10 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை, தடையை மீறிப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதிக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நடந்த மோதலில், காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் அஜிஸ் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து நேற்று நடந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். 150 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இதற்கிடையில், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு மாநில ஆளுநர் என்.என்.வோரா இரங்கல் தெரிவித்துள்ளார். அமைதி காக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.