இந்தியாவில் 800க்கும் மேற்பட்ட பயங்கரவாத முகாம்கள் மறைமுகமாக இயங்கி வருவதாகவும், அயல்நாட்டு ஆதரவுடன் இயங்கி வரும் இந்த முகாம்களின் மூளையாகச் செயல்படுவது யார் என்பது பற்றி விசாரணை நடந்து வருவதாகவும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் "அயல்நாட்டு அமைப்புகளின் ஆதரவுடன் இந்தியாவில் 800க்கும் மேற்பட்ட பயங்கரவாத முகாம்கள் இயங்கி வருவதாக நமது புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன. இந்த முகாம்களுக்கு ஆதரவளிக்கும் உள்ளூர் சக்திகளைக் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றில் சில முகாம்களின் செயல்பாடுகள் பற்றிய முக்கியத் தகவல்கள் புலனாய்வின்போது தெரிய வந்துள்ளன. உள்ளூர் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் அவ்வப்போது அயல்நாட்டு அமைப்புகளைப் போல உள்ளது குறித்து விசாரிக்கையில், அவர்களுக்கு அயல்நாட்டு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது." என்று கூறியுள்ளார்.