Publish Date: Wed, 13 Aug 2008 (12:48 IST)
Updated Date: Wed, 13 Aug 2008 (12:47 IST)
தெற்கு மத்திய மும்பையில் இன்று காலை மூன்று அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள், இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.
குபார்வாடா என்னுமிடத்தில் பெண்டி பஜார் பகுதியில் உள்ள சுமார் 70 ஆண்டுகால பழமை வாய்ந்த இந்த மூன்று அடுக்குமாடி கட்டடத்தில் 14 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த கட்டடத்தின் ஒரு பகுதி இன்று காலை 6 மணியளவில் இடிந்து விழுந்தது. இதையடுத்து அங்கு மீட்பு குழுவினர் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் 10க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது.
பலியானவர்களில் 4 பேர் நரேந்திரா என்பவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. மற்றவர்கள் பற்றிய விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மும்பையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பழமையான இந்த கட்டடம் இன்று இடிந்து விழுந்துள்ளது.