தென் ஆப்ரிக்க சுதந்திர போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் மத்திய சுற்றுலா, கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கலந்து கொண்டு கலாசார பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.
தென் ஆப்ரிக்க சுதந்திரப் போரின் ஒரு பகுதியாக 1908ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தில் மகாத்மா காந்தியும், சில இந்தியர்களும் பங்கேற்று அரசு பதிவுச் சான்றிதழ்களை தீவைத்துக் கொளுத்தினர். இந்தப் போராட்டத்தின் 100-வது ஆண்டு நினைவு தினம் தென் ஆப்ரிக்காவில் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடக்கவுள்ள நிகழ்ச்சிகளில் இந்திய அரசின் பிரதிநிதியாக மத்திய சுற்றுலா, கலாசாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கலந்து கொள்கிறார். இதற்காக 6 நாள் அரசு முறைப் பயணமாக அவர் தென் ஆப்ரிக்கா செல்கிறார்.
தென் ஆப்ரிக்காவில் ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நூற்றாண்டு விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆகஸ்ட் 16ஆம் தேதி நடக்கிறது. 1908-ல் சான்றிதழ் எரிப்புப் போராட்டம் நடைபெற்ற சமீதியா மசூதி நோக்கி நடக்கும் சிறப்பு பேரணியில் அவர் கலந்து கொள்கிறார்.
இந்த பயணத்தின்போது தென் ஆப்ரிக்க கலாச்சாரத் துறை அமைச்சர் பல்லோ ஜோர்டானை சந்திக்கிறார். இரு நாடுகள் இடையிலான கலாசார பரிமாற்ற ஒப்பந்தத்தில் இரு தலைவர்களும் 15ஆம் தேதி கையெழுத்திடுகின்றனர்.
2008-2010ஆம் ஆண்டுகளில் இரு நாடுகளிடையே கலை, கலாச்சாரம், தொல்பொருள் ஆய்வு பரிமாற்றம், புத்தக கைவினைக் கண்காட்சிகள் பரஸ்பரம் நடத்துதல், நிபுணர்கள், திரைத் துறையினர் பரஸ்பரம் பயணம் மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டோரியா நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் 15ஆம் தேதி நடக்கும் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராகவும் அம்பிகா சோனி கலந்து கொள்கிறார்.