அமர்நாத் கோயிலுக்கு நிலம் கொடுத்தது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனை குறித்தும் ஜம்முவில் அமைதியை நிலை நாட்டுவது குறித்தும் அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன்சிங் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் கோயிலுக்கு மாநில அரசு நிலம் ஒதுக்கியது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், நில ஒதுக்கீடு உத்தரவை மாநில அரசு ரத்து செய்து விட்டது.
இதைத்தொடர்ந்து, அமர்நாத் கோவிலுக்கு நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, அமர்நாத் சங்கர்ஸ் சமிதி உள்பட இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 42 நாட்களாக நீடித்து வரும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
இதன் ஒரு கட்டகமாக மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல் தலைமையில் நேற்று 2-ம் நாளாக, டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.
இதில் காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத், பா.ஜ.க. சார்பில் அருண் ஜெட்லி, தேசிய மாநாட்டு கட்சி சார்பில் ஹசன் அக்தர் நஸ்ரி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனைத்து கட்சியினரும் பல்வேறு யோசனைகளை தெரிவித்தனர். இதுபற்றி பரிசீலிப்பதாக சிவராஜ் பட்டீல் கூறினார். இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை.
இதைத்தொடர்ந்து இன்று, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளுமாறு, பிரதமர் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.