வடக்கு காஷ்மீரில் நிலவும் மோசமான வானிலை காரணமாக புனித அமர்நாத் யாத்திரை இன்றும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அமர்நாத் பாதையில் வானிலை சரியில்லை என்று வந்துள்ள தகவல் காரணமாக, ஜம்முவில் இருந்து யாத்திரிகர்கள் யாரும் புனித அமர்நாத் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று காவல்துறைக் கட்டுப்பாட்டு அறை தகவல்கள் தெரிவித்துள்ளன.
அடிவாரத்தில் உள்ள பஹல்காம், பால்டால் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பனிப்புயல் வீசுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி பவனில் 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்நாத் செல்வதற்காகக் காத்திருக்கின்றனர்.
அமர்நாத் கோயில் நில மாற்ற விவகாரம் தொடர்பாக ஜம்மு- காஷ்மீரில் வெடித்துள்ள வன்முறைகளின் காரணமாக, அமர்நாத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை 17 இல் துவங்கிய யாத்திரை வருகிற 16 ஆம் தேதி பெளர்ணமி தினத்துடன் முடிவடைகிறது.