ஆந்திராவில் பெய்து வரும் பலத்த மழைக்குப் பலியானோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆந்திராவில் கடந்த 3 நாட்களாகப் பெய்து வரும் பலத்த மழையினால் ஹைதராபாத், நலகொண்டா, குண்டூர், மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, வாரங்கல், கரீம்நகர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மழைக்கு இதுவரை நூறு பேர் பலியாகியுள்ளனர். குண்டூர் மாவட்டம் நரக்குலப்பாடு பகுதியில் உள்ள கொண்டவீதி வாகு என்ற சிறிய ஆற்றின் குறுக்கில் உள்ள பாலத்தை ஒரு லாரி கடக்க முயன்றது. பாலத்திற்கு மேல் சுமார் 6 அடி வரை வெள்ளம் பாய்ந்ததால், கட்டுப்பாட்டை இழந்த லாரி வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. இந்தச் சம்பவத்தில் லாரியில் இருந்த 40க்கும் மேற்பட்டவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.
கிருஷ்ணா, கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கின. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்கள் அகைவரும் மேடான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் பெரும்பாலான பகுதிகளி ரயில், சாலைப் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அம்மாநில முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
ஆந்திராவின் வடக்க மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.