அமர்நாத் நில மாற்ற விவாரத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளைக் கண்டித்து ஹூரியத் மாநாட்டுக் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ள போராட்டம் காரணமாக ஸ்ரீநகரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் கோடை காலத் தலைநகரான ஸ்ரீநகரில் வர்த்தக நிறுவனங்களும், கடைகளும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. சாலைகள் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. கல்வி நிறுவனங்களும், அரசு அலுவலகங்களும் கூட சரிவர இயங்கவில்லை.
நகரின் முக்கியச் சாலைகளில் எந்நேரமும் ஆயுதங்களை ஏந்திய மத்தியப் பாதுகாப்புப் படையினர் வலம் வருகின்றனர். "எந்தவொரு வாகனத்தையும் முழுமையாகச் சோதிக்காமல் அனுமதிக்க வேண்டாம் என்று பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று மத்திய ரிசர்வ் காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமர்நாத் நில மாற்ற விவகாரத்தில் போராட்டம் நடத்தி வரும் சிலர், முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு அத்தியாவசியப் போருட்கள் சென்றடைவதைத் தடுத்து வருகின்றனர். சில இடங்களில் முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இவற்றைக் கண்டித்து இன்று போராட்டம் நடத்தப் போவதாக ஹூரியத் மாநாட்டுக் கட்சியினர் அறிவித்துள்ளனர்.
இதையொட்டி நகரம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய ரிசர்வ் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.