Publish Date: Mon, 11 Aug 2008 (13:30 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:42 IST)
ஒலிம்பிக் போட்டியில், துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "அபினவ் பிந்த்ரா இந்தியாவை பெருமையடையச் செய்துள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரும் அபினவ் பிந்த்ராவுக்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் இருந்து ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற 'தங்க மகன்' அபினவ் பிந்த்ராவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
இன்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் 'ஏர்ரைபிள்' இறுதிச் சுற்றில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா மொத்தம் 700.5 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று வரலாறு படைத்தார். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்தியா இதற்கு முன்னர் கடந்த 1980ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது ஹாக்கியில் தங்கம் வென்றது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் தங்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Webdunia
Publish Date: Mon, 11 Aug 2008 (13:30 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:42 IST)