மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையில் 5 அமைச்சர்கள் உட்பட 18 பேர் கொண்ட அனைத்துக் கட்சி குழுவினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சூழ்நிலையை நாளை ஆய்வு செய்கின்றனர்.
அருண் ஜெட்லி (பா.ஜ.க.), அமர்சிங் (சமாஜ்வாடி), சீதாராம் யச்சூரி (மார்க்சிஸ்ட்), டி.ராஜா (இந்தியக் கம்யூனிஸ்ட்), மோஹ்சினா கிட்வாய் (காங்கிரஸ்), பரூக் அப்துல்லா (தேசிய மாநாடு), மெஹ்பூப் முஃப்தி (பி.டி.பி.), கே.சி.தியாகி (ஐ.ஜ.த.), நரேஷ் குஜ்ரால் (எஸ்.ஏ.டி.), அக்தர் ஹாசன் (பகுஜன் சமாஜ்), ஆர்.சி.பாஸ்வான் (லோக் ஜனசக்தி) ஆகியோர் குழுவில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் ஆவர்.
பிரித்விராஜ் சவான், ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால், சைபுதீன் சோஸ் (காங்கிரஸ்), ரகுவன் பிரசாத் சிங் (ஆர்.ஜெ.டி.),அ.ராசா (தி.மு.க.) ஆகியோர் மற்ற அமைச்சர்கள் ஆவர்.
அமர்நாத் பக்தர்களின் வசதிக்காக நிலம் வழங்கும் விவகாரத்தால் ஜம்மு- காஷ்மீரில் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விவாதிக்கும் வகையில் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கடந்த 6-ஆம் தேதி அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது.
தொடர்ந்து நடத்தப்படும் போராட்டங்களை கைவிட்டு, பேச்சு மூலம் பிரச்சனையை சுமூகமாகத் தீர்க்க வேண்டும் என்றும் மாநிலத்தில் அமைதியும் இயல்பு நிலையும் திரும்ப எல்லா தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கையின் அடுத்த கட்டமாக மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையில் அனைத்து கட்சியினர் கொண்ட குழுவை அனுப்பி நிலைமைகளை ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் நாளை காஷ்மீர் செல்கின்றனர். போராட்டங்களால் சகஜநிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் ஜம்மு, ஸ்ரீநகர் ஆகிய இடங்களை பார்வையிடுகின்றனர்.