புனித அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நிலம் அளிக்கப்பட்டது தொடர்பான உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்து இதுவரை ஜம்மு பகுதியில் மட்டுமே நடந்த எதிர்ப்பு இயக்கம், எல்லை மாவட்டமான பூஞ்சிலும் பரவியதையடுத்து ஏற்பட்ட கலவரத்தால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புனித அமர்நாத் கோயில் நிர்வாகம் யாத்திரிகர்களுக்கு தங்குமிட வசதி செய்து கொடுக்க ஜம்மு-காஷ்மீர் அரசு நிலமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராடிவரும் ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதி, பூஞ்ச் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்களையும், வங்கிகளையும் வற்புறுத்தி மூடியது மட்டுமின்றி, அரசு அலுவலங்கங்கள் மீதும் கல் வீசித் தாக்கி அடைக்கச் செய்தது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து இன்று அப்பகுதிக்கு இராணுவம் விரைந்தது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
ஸ்ரீநகர் உள்ளிட்ட காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கூட எடுத்துச் செல்ல முடியாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்து வருவதால் அங்கு பெரும் அளவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்ட ராஜெளரி, ஜெளரியா நகர்களில் இன்னமும் பதற்றம் நிலவுவதால் ஊரடங்கு தளர்த்தப்படவில்லை. ஆனால், ஜம்மு, கத்துவா, சம்பா, உதாம்பூர் ஆகிய இடங்களில் நடைமுறையில் இருந்த ஊரடங்கு இன்று தளர்த்தப்பட்டது.
குறைந்த அளவு பலப் பிரயோகம்!
இதற்கிடையே, ஜம்மு பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கலவரக்காரர்கள் மீது இயன்றவரை குறைந்த அளவிற்கான நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படும் என்று அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்திய இராணுவத்தின் 9வது படைப் பிரிவின் துணைத் தளபதி வினய் ஷர்மா கூறியுள்ளார்.
ஜம்மு பகுதியில் நடந்து வரும் போராட்டத்தின் காரணமாக ஏற்பட்ட வன்முறைகளையடுத்து இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கடந்த 3 நாட்களில் மட்டும், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் அவசியமற்று அதிகபட்ச பலப்பிரயோகத்தை இராணுவம் மேற்கொள்ளாது என்று துணைத் தளபதி வினய் சர்மா உறுதியளித்துள்ளார்.